நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அதிக அளவில் நிதி ஒதுக்கி வருகின்றன.
பெருநகரங்களில் ஆங்காங்கே விரிவாக்கம் நடைபெற்று வந்தாலும், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் அவசியம். அதன்படி முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.
அதில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டு கூடங்கள் அமைக்கப்படுவதுடன், தனியார் துறை மூலம் கல்வி மற்றும் சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்களும் அமைக்கப்படும்.
உயர் வருவாய் வகுப்பு, மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் என அனைவருக்குமான வீட்டுவசதிகள் நிறைந்த பன்னடுக்கு கட்டிடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும். விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிர்ந்த பணியிட சேவை, நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு சேவை கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும். இப்புதிய நகரத்தை, சென்னை மாநகருடன் இணைக்க உரிய சாலை வசதிகள், விரைவு பேருந்துகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் அகியவை உருவாக்கப்படும். புதிய நகரத்தை உருவாக்கும் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.
திருக்குறளை 193 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்: ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையை திருக்குறள் பெறும் வகையில் மொழிபெயர்ப்புத் திட்டத்தை பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக 3 ஆண்டுகளில் நிறைவேற்ற ரூ.1.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வு பணிகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படும். பழந்தமிழர்கள் கொண்டிருந்த கடல்வழி வாணிக சிறப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி செலவிலும் உருவாக்கப்படும்.