சென்னை: நம் வீட்டு பிள்ளைகளை ஆண்களை வளர்க்கும்பொது, ”பெண்களை சமமாக மதிக்க வேண்டும். நீ எப்படி இந்த சமூகத்தில் வெளியே போக உனக்கு உரிமை இருக்கிறதோ, நினைத்ததை உடுக்க உரிமை இருக்கிறதோ, நீ தேர்ந்தெடுத்த வேலைக்கு செல்வதற்கு உரிமை இருக்கிறதோ... அதே உரிமை அந்த பெண்ணுக்கும் இருக்கிறது’ என்பதை சொல்லிச் சொல்லி வளர்த்தாலே இந்த சமூகம் நிச்சயம் மாறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (14/03/2025) வெள்ளிக் கிழமை, சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரேசா மகளிர் வளாகத்தில் நபார்டு வங்கியின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி பெண் தொழில் முனைவோருக்கு நினைவு பரிசு வழங்கினார் . முன்னதாக, அவர் நபார்டு மூலமாக அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்!
இவ்விழாவில் கனிமொழி கருணாநிதி உரையாற்றுகையில், ”உலக மகளிர் தினம் என்பது மகளிரை சகோதரியாக தாயாக போற்றக் கூடிய வாழ்த்தக் கூடிய கொண்டாடக் கூடிய ஒரு தினம் இல்லை. இது பெண்கள், தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நிலைநிறுத்தக் கூடிய, உரிமைகளுக்காக செல்ல வேண்டிய பயணம் இன்னும் வெகு தூரம் இருக்கிறது என்று அவர்களுக்கு அவர்களே நினைவுபடுத்திக் கொள்ள கூடிய தினம் தான் மகளிர் தினம். இது வேலண்டைஸ் டே மாதிரி பூங்கொத்து கொடுப்பதற்கோ, டிஸ்கவுன்ட் சேல் போடுவதற்கான தினமோ இல்லை என்பதை நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப் பவர்களும் உணர வேண்டும்.
பொதுவாகவே பெண்களின் முன்னேற்றத்துக்கும் எழுச்சிக்கு தடையாக இருப்பது பெண்களுக்கான கல்வி மறுக்கப் படுவதும், பெண்கள் தற்சார்புள்ளவர்களாக, பொருளாதார சுதந்திரமுள்ளவர்களாக இல்லாத சூழல் இந்த சமூகத்தில் இருப்பதும் தான். எல்லாவற்றுக்கும், தான் சார்ந்திருக்கும் ஆணையே நம்ப வேண்டிய சூழலில் பெண்கள் தனது உரிமைகளுக்காக போராடுவதற்கோ, தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக போராடுவதற்கோ சாத்தியமில்லாத தருணங்களை சந்திக்கின்றனர்.
அப்படிப்பட்ட காலத்திலே.... கருணாநிதி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இன்று பல்கிப் பெருகி தற்போதைய முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மிகப்பெரிய அளவிலே வளர்ந்திருப்பதை பார்க்கிறோம். இன்று நபார்டு வாங்கி மூலமாக எம்பவர் ஆகியிருக்கும் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் இங்கே ஸ்டால் போட்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது, மிகப்பெரிய நம்பிக்கையை எல்லோருக்கும் தரக் கூடிய நிகழ்வாக அது அமைந்திருக்கிறது.
சாதாரணமாக ஒரு கிராமத்தில், ஒரு சின்ன ஊரில் தனக்கு இருக்கக் கூடிய திறமைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியாத சூழலில் இருக்கும் ஆண்கள், பெண்கள்.... தனக்குள் இருக்கும் திறமை., சுற்றியிருக்கும் மக்களிடம் இருக்கும் திறமை இதையெல்லாம் தனக்கான ஒரு பொருளாதாரமாக, தனக்கான ஒரு நம்பிக்கையாக மாற்றக் கூடிய வகையிலே நபார்டு வங்கி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்க்ளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே ராமலிங்கம் அவர்கள் வந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்திலே இருக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு நபார்டு வங்கியின் வழியாக மிகப்பெரிய அளவிலே உதவி செய்திருக்கிறார். எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த மக்களுக்கு நிறைவேற்றித் தருகிறார். அதேபோல தூத்துக்குடியின் பிரதிநிதிகளாக இங்கே வந்திருக்கும் இருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நெய்தல் விழா நடக்கும்போது. அங்கே இருக்கும் மகளிருக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலே கிட்டத்தட்ட 100 ஸ்டால்ஸ் சென்ற முறை போட்டு. எங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள்.
இன்று ஒரு சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தபோது... அழகான பேக்-குகள் வைத்திருந்தார். ‘நீங்க எக்ஸ்போர்ட் பண்றீங்களா?’ என கேட்டேன். ஆமா... பேக்ஸ் தைச்சு எக்ஸ்போர்ட் பண்றோம் என்று ரொம்ப சாதாரணமாக சொன்னார். தஞ்சாவூர் பக்கத்தில் இருந்து வந்த சகோதரி சொன்னபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே மேடையில் பாராட்டும் பரிசும் பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே மேயர் பிரியா குறிப்பிட்டதுபோல... ஒரு சாதாரண பின்புலத்தில் இருந்து வரக் கூடிய, பெண்களை வெளியே அனுப்புவதே போராட்டமாக இருக்கக் கூடிய, படிக்க அனுப்புவதே போராட்டமாக இருக்கக் கூடிய ஒரு பின்புலத்தில் இருந்து இன்று இவ்வளவு பெரிய சாதனைகளை செய்து மற்றாவர்களூக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். அவர்களுக்கும் அவர்களுக்கு உதவியிருக்கும் நபார்டு வங்கி அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் பெண்களின் கல்வி எந்த காலத்திலும் தடைபட்டுவிடக் கூடாது என்றுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் புதுமைப் பெண் என்ற, கல்லூரி படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
அதேபோல. தன் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். அந்த ஆயிரம் ரூபாயை செலவு செய்ய பெண்கள் யாரிடமும் அனுமதி வாங்கவேண்டியதில்லை. பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன என்பதை அந்த ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு சொல்லித் தருகிறது. அதை அடுத்த தலைமுறைக்கு பெண்கள் கடத்தி செல்வார்கள், அவர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படும் என்ற அடிப்படையிதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதேபோலத்தான் விடியல் மகளிர் பயணமும்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க வேண்டும், முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது முதல்வர ஒவ்வொரு நாளும் பெண்களுக்கான திட்டங்களை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறார்கள். இந்த சமூகம் நமக்கு போட்டிருக்கும் தடைகளை நினைத்து நின்றுவிடாமல், அரசாங்கமும் முதல்வரும் அறிவித்திருக்கும் திட்டங்களை எல்லாம் பயன்படுத்தி... இந்த சமூகத்தை நாம் எப்படி மாற்றியமைப்பது, அந்த தடைகளைத் தகர்த்துவிட்டு வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதை நாம் உணர வேண்டும். எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் அதை உடைத்துவிட்டு முன்னேறுவதுதான் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் மகளுக்கு நீங்கள் தரக் கூடிய மிகப்பெரிய சீர் சீதனம். நீங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவதுதான் மிகப் பெரிய சீர், சீதனம்.
நகை சேர்த்துக் கொடுத்தால், அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வேறு எதைக் கொடுத்தாலும் அது இருக்குமா இருக்காது என்பது நிச்சயமில்லை. ஆனால் உங்கள் மகளுக்கு நீங்கள் தரக் கூடிய தன்னம்பிக்கை, பொருளாதார சுதந்திரம், கல்விதான் மிகப்பெரிய பரிசாக இருக்க முடியும். அதே நேரத்தில் மகளிர் தினத்தில் நம் வீட்டு பிள்ளைகளை- ஆண்களை வளர்க்கும்பொது, ‘பெண்களை சமமாக மதிக்க வேண்டும்., சம உயிர். நீ எப்படி இந்த சமூகத்தில் வெளியே போக உனக்கு உரிமை இருக்கிறதோ, நினைத்ததை உடுக்க உரிமை இருக்கிறதோ, நீ தேர்ந்தெடுத்த வேலைக்கு செல்வதற்கு உரிமை இருக்கிறதோ... அதே உரிமை அந்த பெண்ணுக்கும் இருக்கிறது. அந்த இடத்தில் அவள் இருக்கும் போது அவளை மதிக்கக் கற்றுக் கொள். ஜட்ஜ் பண்ண யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்த்தாலே இந்த சமூகம் நிச்சயம் மாறும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் திருமிகு.பிரியாராஜன், நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த், நபார்டு பொது மேலாளர் ஜோதி ஸ்ரீனிவாஸ் மற்றும் திமுக மாவட்ட கழகச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்!