’கொல்லப்பட்டவர் அவரின் மகன் அல்ல, என் சகோதரர்’ உரிமை கோரும் வழக்கறிஞர்; செய்யாறில் பரபரப்பு


திருவண்ணாமலை: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட கட்டிட மேஸ்திரியின் வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் தனது சகோதரர் என காவல் நிலையத்தில் திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வாழவந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி திருப்பதி (32). இவர், தனது தாயார் அலமேலுவுடன் வசித்து வந்தார். இவர்களது கோரிக்கையை ஏற்று, வடகல்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தேர்வு செய்தது. இந்த இடத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் அவரது மகன் புண்ணியகோட்டி (32) ஆகியோர் உரிமை கொண்டாடினர். மேலும், திருப்பதிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் லாரியில் கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணியில் கடந்த 9-ம் தேதி ஈடுபட்டனர். இதையறிந்த திருப்பதி, அவர்களிடம் சென்று கேள்வி எழுப்பினார் அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புண்ணியகோட்டி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் திருப்பதி மீது லாரியை ஏற்றி கொலை செய்தனர்.

இது குறித்து தனது மகன் திருப்பதியை லாரி ஏற்றி கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலமேலு என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், புண்ணியகோட்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு பிறகு திருப்பதியின் உடல் அலமேலுவிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த நா.செல்லப்பன் என்பவர், உயிரிழந்த தனது தம்பியின் உடலை ஒப்படைக்குமாறு தூசி காவல் நிலையில் நேற்று முன்தினம் மாலை மனு அளித்துள்ளார். அம்மனுவில், “நான், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். எனது தந்தை பெயர் நாராயணசாமி, தாயார் பெயர் வேகாமணி. எனது சகோதரி சந்திரகலா, சகோதரர் திருப்பதி ஆகியோர் உள்ளனர். வேலை தேடி வந்த சகோதரர் திருப்பதி,வெம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். எனது உறவினர் மூலம், எனது சகோதரர் திருப்பதியை லாரி ஏற்றி கொலை செய்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து தூசி காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது, வாழவந்தல் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர், தனது மகன் எனக்கூறி, எனது சகோதரர் திருப்பதியின் உடலை பெற்று சென்று நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அடையாள சான்றை உறுதி செய்யாமலும், தீர விசாரிக்காமலும் எனது சகோதரர் திருப்பதியின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பதி கொலை செய்யப்பட்ட தகவலை எங்கள் குடும்பத்துக்கு தெரிவித்தால், கொலையாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மறைத்துள்ளனர். தவறான தகவலை தெரிவித்து எனது சகோதரர் திருப்பதியின் உடலை பெற்று சென்ற அலமேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதியின் உடலுக்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்கு செய்ய, அவரது உடலை ஒப்படைக்க வேண்டும்” என கேட்டுக் ண்டுள்ளார். மேலும் அவர், மனுவின் நகலை செய்யாறு வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் அளித்துள்ளார். அப்போது அவர், இதற்கு தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அலமேலு கூறும்போது, “எனது கணவர் முருகன், கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருப்பதியை அழைத்து வந்தார். எனது பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர் சென்றதால், எங்களுடன் திருப்பதி வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் முருகனின் உயிரிழந் தபோது இறுதி சடங்கை திருப்பதிதான் முன்னின்று செய்தார். அதனால், திருப்பதியை மகனாக ஏற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில், அவரது உடலை பெற்று நல்லடக்கம் செய்துள்ளேன்” என்றார்.

வழக்கறிஞர் செல்லப்பன் புகார் குறித்து காவல்துறை ஆய்வாளர் கோகுல் ராஜ் கூறும்போது, “திருப்பதியை கொலை செய்த 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கொலைக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. முருகன் - அலமேலு தம்பதியுடன் திருப்பதி கடந்த 5 ஆண்டுகளாக இருந்துள்ளார். கிராம மக்கள் மற்றும் வருவாய் துறையினர் தெரிவித்ததன்பேரில், புகார் அளித்த அலமேலுவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழப்பில் சந்தேகம் என்றால் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், உயிரிழந்த நபர் தனது சகோதரர் என அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தைதான் நாட வேண்டும்” என்றார்.

x