சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (காலை சரியாக தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதால் அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆர்பி உதயகுமார், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்வது, ஆளும் திமுகவுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தை அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சமீபத்தில் வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டபோதும், அவரை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆலோசனை கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது எடப்பாடி பழனிசாமியை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.