மின் கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசி இளைஞர் உயிரிழப்பு: பாளையங்கோட்டையில் சோகம்


நெல்லை: பாளையங்கோட்டையில் மின்கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசியதில் ஆ.பேச்சிமுத்து (30) என்பவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து. திருநெல்வேலியில் கடைகள், நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களை சாலையோரங்களில் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மரக் கதவுகள் விற்பனை செய்யும் கடைக்கான விளம்பர பிளக்ஸ் பேனரை, பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே பொருத்தும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.

பேனரை இரும்பு கம்பிகளில் பொருத்தி அதை, சாலையோரம் நடுவதற்கான பணிகளில் பேச்சி முத்துவும், அவரது நண்பரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென்று பிளக்ஸ் பேனரின் இரும்பு கம்பி, மின்கம்பியில் உரசியது. இதில், 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த பேச்சி முத்து மயங்கினார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

x