ராய்பூர்: குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,100 விலை வழங்கியதற்காக சத்தீஸ்கர் மாநில முதல்வரை நேற்று முன்தினம் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்படி, குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,100 விலை வழங்கி 2024-25-ம் ஆண்டில் 1.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காகவும், நெல் சாகுபடியை அதிகரிக்க உதவியதற்காகவும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய்யை, தமிழக விவசாயிகள் நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் தலைமையில் தஞ்சாவூர்- நாகை- திருவாரூர் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், கும்பகோணம் வட்டத் தலைவர் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பூந்துருத்தி சுகுமாரன், நாகை பாலாஜி, திருவாரூர் செங்குட்டுவன், விழுப்புரம் சீதாராமன், நாகாச்சி பாலாஜி ஆகியோர் அவரை சந்தித்து நெல்மணி மாலை, மா, பலா, வாழை, தென்னங்கன்றுகள் வழங்கி வாழ்த்தினர். மேலும், சத்தீஸ்கர் மாநில உணவுத் துறை செயலாளர் அன்பழகனையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.