இந்தி படிப்பதில் என்ன தவறு? 3வது மொழி படிக்க 80% பேர் ஆர்வம்: தினகரன் கருத்து


படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சை: தமிழகத்தில் மூன்றாவது மொழியை படிக்க 80 சதவீதம் பேர் ஆர்வமாக உள்ளனர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி வாரியான அமமுக நிர்வாகிகள் கூட்டம், பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது, “பழனிசாமியுடன் இணைய வேண்டிய அவசியம் அமமுகவுக்கு கிடையாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து செயல்பட்டால் தான் திமுக என்ற தீயசக்தியை வீழ்த்த முடியும். இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் பழனிசாமியிடம் இருப்பதால், 10 முறை தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இயக்கமாக உள்ளது. இதனால், அதிமுகவும், இரட்டை இலையும் பலவீனமாக மாறி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜெயலலிதாவின் இயக்கம் இணைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். விரைவில் நல்ல செய்தி வரும். அ.கி.மூர்த்தி என்பவர் 2004-ம் ஆண்டு, அறிஞர் அண்ணாவின் நேர்காணல் என்ற நூலை தொகுத்துள்ளார். அந்த நூலில் இந்தியா முழுமைக்கும் ஒரு மூன்றாவது மொழி வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அண்ணா இன்று இருந்து இருந்தால், உறுதியாக இந்த கால சூழலில், மூன்றாவது மொழி வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு இருப்பார்.

தமிழக அரசு பள்ளிகளில் தான் 2 மொழி உள்ளது. தனியார் பள்ளிகளில் 3-வது மொழியை மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழகத்தில் மூன்றாவது மொழியை படிக்க 80 சதவீதம் பேர் ஆர்வமாக உள்ளனர். அனைத்து மாநிலங்களை இணைக்கும் மொழியாக இந்தி தான் உள்ளது. இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது. தமிழக எம்.பி.க்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் பேசியதை, தமிழக மக்கள் குறித்துப் பேசியதாக திமுக திசை திருப்பியுள்ளது” என்றார்.

x