சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதைப் போன்று, தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை. வட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்துதான் தமிழகத்துக்கு கஞ்சா கொண்டு வருவதை தடுக்க மத்திய அரசு தவறி வருகிறது என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இருந்து கீரனூர், ராயவரம், துவார், இலுப்பூர், கொத்தமங்கலம் ஆகிய ஊர்களுக்கும், அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி, காரக்கோட்டைக்கும், கந்தர்வக்கோட்டையில் இருந்து செங்கிப்பட்டி, கறம்பக்குடிக்கும், கீரனூரில் இருந்து திருச்சி, இலுப்பூருக்கும், பொன்னம ராவதியில் இருந்து சடையம்பட்டிக்கும் புதிய நகரப் பேருந்துகள், புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் மற்றும் அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கும் புதிய புறநகர் பேருந்து என மொத்தம் 14 புதிய பேருந்துகளின் சேவை நேற்று தொடங்கி வைக்கப் பட்டது.
புதுக்கோட்டையில் ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:மக்களுக்கான போக்குவரத்து சேவையில் புதிய நவீன யுக்திகளை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதைப் போன்று, தமிழகத்தில் எந்த இடத்திலும் கஞ்சா பயிரிடப்படுவதில்லை. வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்துதான் தமிழகத்துக்கு கஞ்சா கொண்டு வரப்படுகிறது. இதை தடுப்பதற்கு மத்திய அரசு தவறி வருகிறது.
அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு 4.5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்தான் முன்னாள் முதல்வர் பழனிசாமி. நாங்கள் டெல்லிக்கு அடங்கிப் போவதும் இல்லை. அடமானம் வைக்கப்போவதும் இல்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புபவர் தமிழக முதல்வர்தான். சொந்த புத்தி, சொந்தக்காலில் நிற்கும் சக்தி, சொந்த மண்ணை காப்பாற்றுகிற திறமையும் திமுகவுக்கு உண்டு.
திமுக இதுவரை என்னென்ன நலத்திட்டங்களை நிறைவேற்றியது என்பதை பட்டியலிட்டு சொல்கிறோம். பழனிசாமியும் சொல்லட்டும். பழனிசாமி அழைத்தால் நானே விவாத மேடைக்கு வந்து பதில் அளிக்கத் தயார். திமுக அரசில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். திமுக அரசுக்கு எதிராக பழி சுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க பாஜக நினைத்தால் அதை தைரியத்தோடு எதிர்கொள்ள திமுக தயங்காது” என்றார். இந்நிகழ்ச்சியில், மேயர் திலகவதி செந்தில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முகமது நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.