ஓசூர் விவசாயிகள் சூப்பர் முயற்சி: சாமந்திப்பூ சாகுபடிக்கு ‘கை கொடுக்கும்’ மின்னொளி பந்தல்!


கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் மகசூல் அதிகரிக்கவும், தரமான உற்பத்திக்காகவும், சாமந்திப்பூ சாகுபடியில் மின்னெளி பந்தல் முறையை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், மானிய விலையில் சூரிய சக்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர், பாகலூர், தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மலர் மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாமந்திப்பூ, ரோஜா உள்ளிட்ட மலர்களைச் சாகுபடி செய்து, உள்ளூர் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மாறி வரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், விவசாயிகள் மலர் சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சாமந்திப்பூ வயல்களில் எல்இடி பல்புகளால் பந்தல் அமைத்து, பூ விளைச்சலை பெருக்க விவசாயிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சாகுபடி முறையில் உற்பத்தியாகும் பூக்கள் தரமாகவும், தெளிவாகவும், எளிதில் வாடாமலும் உள்ளதால், மலர் சந்தையில் நல்ல வரவேற்பும், விலையும் கிடைத்து வருகிறது. இதனால், இம்முறையை ஓசூர் பகுதியில் 60 சதவீதம் விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: சாதாரணமாகச் சாமந்திப்பூ சாகுபடி செய்யும்போது, பூக்கள் செடிகளில் ஒரே நேரத்தில் மலரும். நோய்ப் பாதிப்பால், பூக்களின் தரம் குறையும். இந்த மலர்கள் பண்டிகை காலங்களில் சந்தையில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.160 வரை விலை கிடைக்கும். அதேநேரம் எல்இடி மின்விளக்கு பந்தல் அமைத்து இரவில் மின் விளக்குகளை ஒளிர விடுவதன் மூலம் வெப்பத்தின் காரணமாகப் பூக்களின் தண்டு திடமாகவும், மொட்டுகள் கருகாமலும், பெரிய அளவில் பூக்கள் மலருகிறது. மேலும், செடிகளில் பூக்கள் ஒரே நேரத்தில் மலராமல் மெல்ல மெல்ல மலர்கிறது. இம்முறை பின்பற்றப்படும் சாமந்திப்பூவுக்குச் சந்தையில் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விலை கிடைக்கிறது.

ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 150 எல்இடி பல்புகள் தேவைப்படுகின்றன. மின் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே, முழு மானியத்தில் எல்இடி பல்புகளும், மின் கட்டணச் சலுகையும் வழங்க வேண்டும் அல்லது மானியத்தில் சூரிய சக்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுக்குப் பரிந்துரை: இது தொடர்பாக தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் கூறும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,000 ஏக்கருக்கு மேல் எல்இடி பல்புகளில் பந்தல் அமைத்து மின்னொளியில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு ள்ளனர். வனப்பகுதியையொட்டிய பகுதியில் மின்னொளி பந்தல் அமைக்கும்போது வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த சாகுபடி முறையைப் பின்பற்ற மின்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினரிடம் விவசாயிகள் உரிய ஆலோசனை பெற வேண்டும். இந்த தொழில்நுட்ப முறையில் விவசாயிகள் எதிர்பார்க்கும் மானியம் தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்” என்றனர்

x