வரி செலுத்தாதோர் வீடுகளின் முன்பு பள்ளம் தோண்டிய பண்ருட்டி நகராட்சி: அதிரடி முடிவு


கடலூர்: பண்ருட்டி நகராட்சியில் ரூ.4 கோடி வரையில் சொத்து வரி பாக்கி உள்ளது. மேலும் ரூ. 1 கோடியே 45 லட்சத்துக்கு குடிநீர் வரி, ரூ. 1 கோடியே 42 லட்சத்துக்கு தொழில் வரி, ரூ.2 கோடி வரையில் குத்தகை இனங்கள் மூலம் வரி பாக்கியுள்ளது.

நகராட்சிக்கு வர வேண்டிய நிலுவை வரிகளை வசூல் செய்ய, நகராட்சி ஆணையர் கண்ணன் (பொறுப்பு), பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வரி வசூலை தீவிரப்படுத்த நகராட்சிக்கு சொந்தமான சுகாதார துறை வாகனங்கள் அனைத்திலும் ஒலி பெருக்கி அமைத்து, நகரின் முக்கிய இடங்களில் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

போதிய கால அவகாசம் கொடுத்தும், வரி செலுத்தாத தொழில் நிறுவனங்கள் தங்களது வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆணையாளர் கண்ணன் (பொறுப்பு), வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தச் சூழலில் பலமுறை வலியுறுத்தியும் வீட்டு வரி செலுத்தாத சில வீடுகளின் முன்பு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று காலை தொடங்கியது. பண்ருட்டி நகராட்சியில் உள்ளவர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் நகராட்சியின் நடவடிக்கை சரி என்று ஆதரித்தும் பேசி வருகின்றனர்.

x