சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு


கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கனக சபையில் நின்று தரிசனம் செய்ய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அந்த உத்தரவை மீறி பக்தர்களை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக சில தீட்சிதர்கள் மீது சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலரான சரண்யா போலீஸில் புகார் அளித்தார். அதன்படி பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் பட்டு என்பவர் உள்ளிட்ட 6 தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பட்டு உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு: இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண்ணை சாதிப் பெயரைக்கூறி திட்டியதாக கவுரி சங்கர் என்பவர் உள்ளிட்ட 8 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தீட்சிதர்கள் 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கையும் ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

x