தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு வேலை: அதிமுக வலியுறுத்தல்


அன்பழகன்

புதுச்சேரி: தமிழ் மொழி மீது இந்த அரசுக்கும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறை இருந்தால், 1 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு துறைகளில் பணி வழங்கப்படும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழி பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய தேசிய கல்விக் கொள்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமான பிரச்சினையில் திமுக - காங்கிரஸ் சட்டப் பேரவையில் நாடகமாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவு என்ன ? காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் அதன் நிலைப்பாடு என்ன ?. இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவு என்ன ? காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் அதன் நிலைப்பாடு என்ன ?. தமிழகத்தில் இந்தியை திணித்தது காங்கிரஸ் அரசு. அதை விரட்டி அடித்தவர் அண்ணா. அவரால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இன்று வரை தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தற்போது மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்கும் செயலில் காங்கிரஸ்-திமுக ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் தமிழே படிக்காமல் பல மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ் மொழி மீது இந்த அரசுக்கும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறை இருந்தால், 1 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு துறைகளில் பணி வழங்கப்படும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x