தாக்கலானது தமிழக அரசின் பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியானதா? அறிவிப்புகள் என்னென்ன?


சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார்.

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். எனவே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், ‘பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம்.” என்றார்.

இந்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் வருமாறு:

சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.

ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்ப்டுத்தப்படும்.

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும்.

ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும்

ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமைய 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.

ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்..மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்

சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்புகள் கற்பிக்கப்படும்.

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் சூழலில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

x