திருப்பூர்: தாராபுரம் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் சையது அப்துல் ஹக்கீம். இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, தாராபுரம் கிளையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பை ஒன்று கிடந்தது. அதனை எடுத்து பார்த்த போது, ரூ.1 லட்சத்து 1,500 ரொக்கம் இருந்தது. பணப் பையுடன், தாராபுரம் காவல் நிலையத்துக்கு சென்ற அவர், பணியில் இருந்த போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்தார். அரசுப் பேருந்து ஓட்டுநர் அப்துல் ஹக்கீமின் நேர்மையை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினர்.