முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், ‘நமது கோயில்கள்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ரங்கராஜன் நரசிம்மன், தன்னை பழிவாங்கும் நோக்குடன் அரசு இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக சத்தம்போட்டு பேசினார். இதனால் கோபமுற்ற நீதிபதி, ‘‘இது ஒன்றும் சந்தையல்ல, நீதிமன்றம்’’ என கண்டிப்பு தெரிவித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த மனு மீது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.