எட்டயபுரம் அருகே மேம்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்: அணிவகுத்து நின்ற வாகனங்கள் 


கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கீழஈரால் கிராமப் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். தங்கள் பகுதிக்கு மேம்பாலம் அமைக்க கேட்டு கீழஈரால் மக்கள் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈரால் கிராமத்தையடுத்த தம்பாலூரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனி முருகன் (35). இவர் இன்றிரவு கீழஈரால் கிராமத்துக்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீனி முருகன் மீது மோதியது.

விபத்தில் சீனி முருகன், மோட்டார் சைக்கிளில் வந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் மகாராஜன் (20), கணேசன் (42) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, விபத்து நடந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட 100-க்கும் மேற்பட்ட கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்களது கிராமத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும். இது குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மேம்பாலம் அமைக்காமல் காலந்தாழ்த்தி வரும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். அவர்களிடம் எட்டயபுரம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதிமொழி கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் சுமார் 8 மணிக்கு தொடங்கி போராட்டம் ஒன்றரை மணி நேரத்தையும் கடந்து நீடித்தது. இதன் காரணமாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

x