உதகை: உதகை அருகே தனியார் தோட்டத்தில், தேயிலை பறிக்க சென்ற பெண்ணை வனவிலங்கு தாக்கி கொன்று தின்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் என்பவரது மனைவி அஞ்சலை (50). இவர் நேற்று தேயிலை பறிக்க அருகே உள்ள காலிபெட்டா என்ற பகுதிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று இரவு வரை அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று காலை அரக்காடு அருகே உள்ள காலிபெட்டா பகுதியில் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவரை வன விலங்கு தாக்கி கொன்று தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்று கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சாப்பிட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து உடனடியாக உதகை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதகை வடக்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். இதில் சடலமாக கிடந்தது நேற்று முமாயமான அஞ்சலை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, ''நீலகிரியில் வன விலங்குகள் அடிக்கடி மனிதர்களைத் தாக்குவதும், இதன் காரணமாக மனிதர்கள் காயமடைவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே கடந்த ரெண்டு வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்கனவே சிறுத்தை தாக்கி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடந்திருப்பதால், இந்த பகுதியில் வேலைக்கு செல்ல பயமாக உள்ளது. என்ன விலங்கு தாக்கியது என்பது குறித்து உடனடியாக கண்டறிந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, “அஞ்சலையை தாக்கி கொன்று இழுந்து சென்று சாப்பிட்டது சிறுத்தையா அல்லது புலியா என்பதை கண்டறிய அப்பகுதியில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நவீன தானியங்கி கேமராக்கள் பொறுத்தி வன விலங்கை கண்டறியவும், ஞாயிற்று கிழமை வரை அந்த பகுதியில் யாரும் பசுந்தேயிலையை பறிக்க செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று அவர்கள் கூறினர்.