வத்தலக்குண்டு: வத்தலகுண்டு கண்ணன் நகரில் தென் மாவட்ட அளவில் நடந்த கிடா முட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் பங்கேற்ற கிடாய்கள் ஆவேசமாக மோதிக்கொண்டன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு சங்கம் சார்பில், தென் மாவட்ட அளவிலான கிடா முட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 90 க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டிகளில் பங்கேற்றன. போட்டிகளை வத்தலக்குண்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் துவக்கி வைத்தார்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கிடாய்கள் களம் இறக்கப்பட்டன. களத்தில் இறங்கிய கிடாய்கள் ஆவேசமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதின. போட்டியில் எதிர்த்து நின்ற கிடாயை அதிக முட்டுகள் முட்டி கீழே விழாமல் நின்ற கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதிகபட்சமாக 60 முட்டுகளுக்கு மேல் முட்டி களத்தில் நின்ற இரண்டு கிடாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவிற்கு வத்தலகுண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் சின்னதுரை, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட பொது செயலாளர் ரவி ஆகியோர் வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பீரோ, கட்டில், பாத்திரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். திமுக பேரூர் துணைச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.