நாகர்கோவில்: குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் ‘அனுபமா’ என்ற யானையை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இந்த யானையின் உணவுத் தேவைக்காக, தென்னை ஓலை பறிக்க இரு பாகன்கள் அதனை அழைத்துச் சென்றனர். பின்னர், மாலையில் யானை திரும்பி வரும்போது ஒரு பாகனை காணவில்லை.
யானை மீது அமர்ந்திருந்த மற்றொரு பாகன் குடிபோதையில் இருந்ததால் யானை எங்கு செல்வது என தெரியாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதற்கிடையில், போதையில் இருந்த பாகன், யானை மீது படுத்து தூங்கினார். அவர் கீழே விழுந்தால் ஆபத்து என அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு வந்து பாகனை மீட்டு, யானையை அழைத்துச் சென்றனர். இதுகுறித்து, யானைப்பாகன், யானை உரிமையாளர் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.