தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மேற்கு மண்டல பகுதியில் 14-வது வார்டில் விரைவில் புதிய குறுங்காடு அமைக்கப்படவுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் மாநகரில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை. காலிமனையில் தேங்கியுள்ள தண்ணீரில் குழந்தை தவறி விழுந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் அதிக காலிமனைகள் உள்ளன.
காலிமனை உரிமையாளர்கள் தங்கள் இடங்களில் மணல் நிரப்ப, மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே 400 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் 93 பேர் தங்கள் இடங்களை நிரப்பியுள்ளனர். மற்றவர்களும் தங்கள் காலிமனைகளில் தண்ணீர் தேங்காதவாறு மணல் நிரப்ப வேண்டும். காலிமனைகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காலிமனை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆணையர் எச்சரிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த இரு தினங்களுக்கு முன் காலிமனையில் தேங்கி இருந்த மழை நீரில் சிறுமி தவறி விழுந்த செய்தி வலைதளத்தில் வெளியானது. அந்த இடத்தை மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீர் தேங்காதவாறு மணலால் நிரப்பி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அந்த மனையின் உரிமையாளருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.