புதுச்சேரி: ஈசிஆரில் அமையும் புதிய பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அம்சங்கள் வருமாறு: புதுவை மாநிலத்தில் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தென்னை விவசாயிகளுக்கும் பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
புதுவையில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை பெருக்க 1,500 பேருக்கு 50 சதவீத மானியத்தில் கறவை பசு வழங்கப்படும். 10 ஆயிரம் கறவை பசுக்களுக்கு 85 சதவீத அரசு மானியத்துடன் காப்பீடு செய்யப்படும்.
கடந்த 2015 முதல் 2021 ஆண்டுகளுக்கான ‘தமிழ் மாமணி’ விருதுகள் வழங்கப்படும். புதிதாக சொற்பொழிவாளர், புகைப்படம், திரைப்படம், ஆவணப்படம் ஆகிய துறைகளுக்கும் ‘கலைமாமணி’ விருது வரும் நிதியாண்டு முதல் தரப்படும்.
காரைக்கால் அம்மையார் பெயரில் கலை பண்பாட்டுத் துறையில் விருதுகள் வழங்கப்படும். காரைக்காலில் அருங்காட்சியகம், கலையரங்கம் கட்டப்படும். பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளது.
காரைக்கால் நேரு நகரில் நுாலகத்துடன் கூடிய தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். பாண்லேயில் ஐஸ்கிரிம் தயாரிக்கும் பிரிவு நிறுவப்படவுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கு ‘அடல்பிகாரி வாஜ்பாய் பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.23 கோடியில் பெரியவாய்க்கால் புனரமைக்கப்படும். ரூ.55 கோடியில் கடலுார் சாலையில் ரெயில்வே மேம்பாலம், ரூ.9 கோடியில் பான்சியானோ பள்ளி பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.
நகர பகுதியில் பாதாளச் சாக்கடை ரூ.52 கோடியில் மறுசீரமைக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும். இதற்கான பணிகள் வரும் நிதி ஆண்டில் முடிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.