அதிமுக கூட்டணிக்கு பச்சை கொடி: ராஜ்யசபா சீட் குறித்து பாசிட்டிவாக பேசிய ராமதாஸ்! 


விழுப்புரம்: அன்புமணியின் ராஜ்யசபா சீட் குறித்த கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திமுக அரசு நாளை மறுநாள் 15-ம் தேதி இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை வெளியிட உள்ளது. எராளமான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. தடுப்பணைகள் கட்டப்படவில்லை. புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளால் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொன்னது எதுவும் நடக்கவில்லை.

சத்தீஸ்கரில் ரூ.3120, ஒடிசாவில் ரூ.3100 என்ற வரிசையில் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை ரூ 3500 ஆக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு உயர்த்தவில்லை.

சென்னையில் 22-ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்துக்கு 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக துணை முதல்வரை தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். கர்நாடக அரசின் நிதி நிலை அறிக்கையில் மேகேதாட்டு அணை கட்ட ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைக்கக்கூடாது என்று 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டேன். ஆனால் கர்நாடகாவை அழைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்துள்ளார். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 உயர்த்தி இருப்பது வரவேற்கதக்கது. தமிழகத்தில் இத்தொகையை ரூ 2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்” என்றார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியது, “தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது குறித்த புத்தகங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொடுக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள்” இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

தொடர்ந்து அன்புமணியின் ராஜ்யசபா பதவிகாலம் முடிவடைகிறதே, இதுபற்றி ஏதும் கோரிக்கை வைத்துள்ளீர்களா என ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது “ அந்த யோசனையை இப்போது இவர்தான் சொல்கிறார். வைக்கலாம் போலிருக்கிறதே. நீங்கள் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்களேன்” என்றார். யாரிடம் சிபாரிசு செய்யவேண்டும் என கேட்டதற்கு, “ அதை ரகசியமாக கேளுங்கள் சொல்கிறேன், திமுகவிடம் கேட்கமாட்டோம். திமுகவிடம் கேட்கமாட்டோம்” என்றார். இது அதிமுக கூட்டணிக்கான சமிக்‌ஷையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

x