கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணா வித்யாலயா சந்திப்பில் இருந்து வண்ணான் கோவில் சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று பெய்த மழையின்போது, மேம்பாலத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தேவையான இடங்களில் மழைநீர் வெளியேறும் குழிகள் அமைத்து, குழாய்கள் போடப்பட்டுள்ளன. அதன் வழியாக மழைநீர் வெளியேறி வந்தது. இருப்பினும் குப்பை, கழிவுகள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு சென்று அடைப்புகளை சரி செய்த பின்னர், தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது’’ என்றனர்.