இபிஎஸ்சுக்கு இந்தி எது, இங்கிலீஸ் எது, தமிழ் எதுன்னே தெரியாது - மா.சுப்பிரமணியன் கிண்டல்


சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னேறிது என்று சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி யோசித்திருக்க வேண்டும் அல்லது சொல்வதற்கு வெட்கப்பட்டு இருக்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னேறியதா?. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதை சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் அல்லது சொல்லும்போது கொஞ்சம் வெட்கப்பட்டாவது இருக்க வேண்டும், காரணம், அவர்களுடைய 10 ஆண்டுகால ஆட்சி என்பது தமிழ்நாட்டினுடைய ஒரு இருண்டகால ஆட்சி என்றே எடுத்துக்கொள்ளலாம்.

2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு விடைகாணுகிற வகையில் அன்றைய ஒன்றிய பிரதமர் மன்மோகன்சிங், பெருமதிப்பிற்குரிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா அம்மையார் இவர்களை எல்லாம் அழைத்து வந்து சென்னை துறைமுகத்தில், ஒரு மிகப்பெரிய அளவிலான திட்டம் அதாவது மதுரவாயில் முதல் துறைமுகம் வரை, ஒரு நீண்ட மேம்பாலம் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்காண்டார்கள். இந்த 19 கிலோமீட்டர் தூரத்திற்கான நீண்ட மேம்பாலம் 1.5 கிலோமீட்டர் தரைவழி, 17.5 கிலோமீட்டர் ஆகாய வழி. அந்த பாலம் கட்டுவதற்கு ரூ.1,655 கோடி செலவில் அன்றைக்கு பணிகளை தொடங்கினார்கள். பணிகள் வேகமாக நடைபெற்று 25 சதவீத பணிகள் முடிவுற்று தூண்கள் எல்லாம் சாட்சிகளாக நின்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு, ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, நீர் நிலைகளில் தூண்களை அமைத்துவிட்டார்கள் என்கின்ற ஒரு பொய்யான, பொருந்தாத காரணங்களை சொல்லி அந்த பணிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

முட்டுக்கட்டை போட்டதன் விளைவு, மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான மீக நீண்ட மேம்பாலம் கட்ட முடியாமல் போய்விட்டது. அதற்கு உண்மையான காரணத்தை மாநகர மக்கள் நன்கறிவார்கள். அந்த பாலம் அமைந்திருந்தால், 17.5 கிலோமீட்டருக்கான ஆகாய வழி மேம்பாலம் அமைந்திருந்தால் கருணாநிதிக்கு பெரிய அளவிலான நற்பெயர் சேர்ந்திருக்கும். இந்தியாவிலேயே நீண்ட ஆகாய வழி மேம்பாலத்தை கட்டிய பெருமைக்குரியவர் கருணாநிதி என்கின்ற நற்பெயர் அவருக்கு போய்விடக்கூடாது என்பதற்காகவே அந்த பாலத்தை ஜெயலலிதா நிறுத்தினார். அதன்பிறகு வந்த எடப்பாடியும், அதில் இருக்கிற உண்மைத்தன்மையை கண்டறிந்து, அந்த பாலம் கட்டுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2022-ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் தொடர்ந்து பேசி இந்த பாலம் அமைய வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி, இப்போது ரூ.5,611 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே ரூ.1,655 கோடியில் கட்டப்படவேண்டிய பாலம், ரூ.5,611 கோடி அளவிற்கு கட்டுவதற்குரிய நிலை ஏற்பட்டு, இவ்வளவு பொருளாதாரம் வீணடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பங்கேற்றிருந்த அதிமுக காரணம் அல்லவா. அவர் எங்கள் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு முன்னேறியது என சொன்னால் அவர் கொஞ்சம் யோசித்து, அறிக்கையை அல்லது பேட்டியை தந்திருக்க வேண்டும்.

இன்னொன்று 2017-ஆம் ஆண்டில்தான் ”உதய் மின் திட்டத்தில்” இவர்கள் இணைந்தார்கள். உதய் மின் திட்டத்தில் இவர்கள் இணைந்ததால்தான் இன்றைக்கு மின் கட்டணம் என்பது தொடர்ச்சியாக உயர்ந்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் 2017-2018 ஆம் ஆண்டுகளில்தான் நீட் தேர்வுக்கு இவர் ஒப்புதல் அளித்தார். நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளித்த காரணத்தினால்தான் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மடிந்துபோனார்கள். இந்த நிலைகளை எல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ அவருடைய ஆட்சி மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியல் தந்த ஆட்சி என்பதைபோன்ற தோற்றத்தை இப்போது சொல்வது என்பது, மக்கள் அந்த காலத்தின் அவலங்களை மறந்து விட்டார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு சொல்வது நிச்சயம் மாநகர மக்கள் மறதிக்குள்ளானவர்கள் அல்ல.

மாநகர மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடியின் நிர்வாகத்திறமை மிக நன்றாக தெரியும். இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில், அவர் செய்திருக்கின்ற சாதனைகளில் ஒன்று காலை உணவுத் திட்டம். காலை உணவு திட்டத்தை இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்கள் அதை நகலெடுத்து செய்வது என்பதையும் கடந்து, வெளிநாடுகளில் இருப்பவர்களும் அதை நகலெடுத்து செய்துகொண்டிருக்கிறார்கள். கனாடா, இலங்கை போன்ற நாடுகள் காலை உணவு திட்டத்தை அவர்கள் செயல்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த மகத்தான திட்டத்தை இன்றைக்கு ஹரியானா, டெல்லி, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்கள் நகலெடுத்து அந்த அறிக்கையைத் தந்து, அவர்களும் நாங்கள் இதை செயல்படுத்துகிறோம் என்று சொல்லி எல்லா மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு இந்த திட்டம் இன்றைக்கு துணையாக இருந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், அதேபோல் இன்றைக்கு புதுமைப்பெண் போன்ற இந்த மூன்று திட்டங்களினால் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை என்பது அதிகளவில் உயர்ந்து, இந்தியாவிலேயே அதிக அளவில் உயர்கல்விக்கு மாணவிகளும், மாணவர்களும் செல்லும் நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது. இப்படி இன்றைக்கு தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு காரணம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகாலத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் தான். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற திட்டங்கள் தான் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். இதை மறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் எத்தனை ஜமக்காலங்களை கொண்டு வந்தாலும் இதை மூட முடியாது ” என்று தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, இந்தி திணிப்பை கொண்டுவந்த காங்கிரஸோடு முதலில் கூட்டணி வைத்ததே திமுகதான் எனவும், திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் இபிஎஸ் கூறியது பற்றிய கேள்விக்கு, “ எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி எது, இங்கிலீஷ் எது, தமிழ் எதுவென்றே தெரியாது. கம்பராமாயணத்தையே சேக்கிழார் எழுதினார் சொன்னார். அவரை பற்றியெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றார்

x