ஓட்டுநர் மீது தாக்குதல்: தஞ்சையில் ஷேர் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்


தஞ்சாவூரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்.

தஞ்சாவூர்: தஞ்சையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை (மே 27 ம் தேதி) இ.பி.காலனி நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை இ.பி. காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் (24) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நாஞ்சிக்கோட்டை சாலை முணியாண்டர் காலனி அருகே சென்றபோது, நான்கு இளைஞர்கள் அந்த ஆட்டோவை மறித்து, குடிபோதையில் இருந்த ஒரு இளைஞரை ஷேர் ஆட்டோவில் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு புஷ்ப ராஜ், ஷேர் ஆட்டோவில் பெண் பயணிகள் உள்ளதாகவும், ஆட்டோவில் இனி பயணிகள் அமர இருக்கை இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் புஷ்பராஜை ஷேர் ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த புஷ்பராஜ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் தெற்கு போலீஸார் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தஞ்சாவூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புஷ்பராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (மே 28) வல்லம் மற்றும் நாஞ்சிக் கோட்டை சாலையில் இயக்கப்படும் 52 ஷேர் ஆட்டோக்களையும் இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இன்று மாலை ஜமால் உசேன் நகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் விஜய், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் புஷ்பராஜை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஷேர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையீடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

x