சீமான் வீட்டில் கைதான பணியாளர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சம்மன் ஒட்ட சென்றபோது போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் கைதான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சீமான் வீட்டில் கைதான பணியாளர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,‘‘இந்த வழக்கை போலீஸார் 12 வாரத்துக்குள் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், பிப்.27 அன்று சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பிப்.,28 அன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று சீமான் வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டினர். போலீஸார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர்.

அப்போது வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியரான முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் தடுக்க முயற்சித்தார். இதனால் சீமான் வீட்டிலிருந்த 2 ஊழியர்களை இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, துப்பாக்கி வைத்திருந்த காவலாளி அமல்ராஜ், சம்மனை கிழித்த சுபாகர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர். இவர்களின் ஜாமீன் மனு கடந்த இரு வாரங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

x