கல்வி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்: ஸ்டாலின் உறுதி


சென்னை: மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என்று நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திருவள்ளூர் திருப்பாச்சூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கான அரசாகத் திகழ்ந்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கு துணை நிற்க வேண்டிய மத்திய அரசு, பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் அடிமை கூட்டம் நாங்கள் இல்லை. அதனால்தான் மத்திய அரசின் அணுகுமுறையைக் கண்டித்து, `தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்' எனும் தலைப்பில் இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தேசிய கல்விக் கொள்கை, தமிழக கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து ஒழித்துவிடும் என்பதால் எதிர்க்கிறோம். அதனால் கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். நீங்கள் ரூ.10 ஆயிரம் கோடியே தந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். நாம் எதிர்ப்பதால் எழுந்த கோபத்தில் தமிழக எம்பிக்களை நாகரிகமற்றவர் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பேச்சை அவர் வாபஸ் பெற வைத்தனர் திமுக எம்பிக்கள்.

இறுதியில் தமிழ்நாடு வெல்லும்: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் எம்பி தொகுதிகளின் எண்ணிக்கையை 39-ல் இருந்து 31 ஆக குறைக்க திட்டமிடுகின்றனர். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். உரிமைகள் பறிக்கப்படும். இதனால்தான் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முயல்கிறோம். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 கட்சிகளுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22-ம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது.

பாஜகவின் நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை திரட்டுவோம். இந்தப் போராட்டம் இந்தியா முழுமைக்கான போராட்டமாக மாறப் போகிறது. நாடாளுமன்றத்தில் நாள்தோறும் நீங்கள் வசைபாடினாலும் இறுதிவரை போராடுவோம், இறுதியில் தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான சா.மு.நாசர், திருத்தணி எம்எல்ஏவும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜு உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

x