1-9 வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையில் ‘2024’ என இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!


மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (மார்ச் 12) வெளியிடப்பட்ட 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையில் 3 இயக்குநர்கள் கையெழுத்திட்டதில் ‘2024’ என இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதால் சில மணி நேரங்களில் தவறு திருத்தி 2025 என மாற்றப்பட்டது.

அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5-ம் வகுப்பு மற்றும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25-ம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை புதன்கிழமை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது. அத்தகைய சுற்றறிக்கையில் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்த அட்டவணையில், பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் ஆகியவற்றின் இயக்குநர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர். தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் 2025-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக ‘2024’-ம் ஆண்டு என தவறாக இடம்பெற்றிருந்தது. இந்த அட்டவணை கிடைக்கப்பெற்ற ஆசிரியர்கள், மூன்று இயக்குநர்கள் கையெழுத்திட்ட அட்டவணையில் தவறு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரங்கள் கழித்து தவறாக 2024 என்று குறிப்பிட்ட ஆண்டை திருத்தி 2025 என திருத்திய அட்டவணையை அனுப்பியதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

x