வேலூரில் 13 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்: ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவு


வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் இருந்த 3 பேருக்கு வட்டாட்சியர் பதவி உயர்வு அளித்தும், 10 வட்டாட்சியர்கள் என மொத்தம் 13 பேரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கி.பழனி, பதவி உயர்வு பெற்று வேலூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் ஆர்.பாலச்சந்தர் பதவி உயர்வு பெற்று வேலூர் வட்டாட்சியர் அலுவலக ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் எஸ்.வேல்முருகன் பதவி உயர்வு பெற்று வேலூர் அலகு -1 நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கே.வி.குப்பம் வட்டாட்சியர் ச.சந்தோஷ் வேலூர் மாநகராட்சி வடக்கு நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், வேலூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் எஸ்.நரசிம்மன் ராணிப்பேட்டை மாவட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியர் இல.வடிவேலு வேலூர் வட்டாட்சியராகவும், ராணிப்பேட்டை மாவட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ்.மகேஷ்வரி வேலூர் மாநகராட்சி தெற்கு நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் கே.வி.குப்பம் வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், வேலூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஏ.சி.விநாயகமூர்த்தி வேலூர் முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் அலுவலக தனி வட்டாட்சியராகவும், அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ராஜ்குமார் பேரணாம்பட்டு வட்டாட்சியராகவும், அங்கு ஏற்கெனவே வட்டாட்சியராக இருந்த எஸ்.சிவசங்கர் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், வேலூர் அலகு -1 நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ்.சச்சுதானந்தன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்-பிரிவு தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

x