கும்பகோணம் - பட்டீஸ்வரம் ராமலிங்க சுவாமி கோயிலில் பாதாள அறை; பக்தர்கள் நெகிழ்ச்சி!


கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் முந்தாலம்மன் கோயில் தெருவில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது. ராஜராஜ சோழனின் 5-வது மனைவியான பஞ்சவன் மாதேவியின் பள்ளி படைகோயில் இது.

இக்கோயிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, ரூ.61 லட்சத்தில் திருப்பணிகள் தொடங்கும் வகையில் 2023, ஜூலை மாதம் பாலாலயம் நடைபெற்றது. திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோயிலின் வடக்கு பிரகாரத்தில் பாதாள அறை நேற்று கண்டறியப்பட்டது.

தகவலறிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஹம்சன், செயல் அலுவலர் நிர்மலா, புலவர் செல்வசேகரன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்று பாதாள அறையைப் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியது: கும்பாபிஷேக திருப்பணிகளின் ஒருபகுதியாக கோயிலின் வடக்குப் புற பிரகார தரை தளத்தைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, திடீரென தரை உள்வாங்கியது. இதையடுத்து, மண்ணை அகற்றி பார்த்தபோது 6 அடி அகலத்தில், 12 அடி நீளத்தில் பாதாள இருப்பது தெரியவந்தது.

பாதாள அறைக்குள் விரைவில் சென்று ஆய்வு செய்யப்படும். இந்த பாதாள அறை குறித்து அறநிலையத் துறை வல்லுநர் குழுவுக்குப் பரிந்துரை செய்து, இந்த பாதாள அறையை பக்தர்கள் பார்வையிட அனுமதிப்பது தொடர்பாக கருத்து கேட்டு, அதிகாரிகள் உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

x