திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா? - புதுச்சேரி பாஜக எம்எல்ஏ கேள்வி


புதுச்சேரி: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பேசும்போது, “புதுச்சேரியை தொழில், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் ‘பெஸ்ட்’ ஆக மாற்றுவோம் என்று பிரதமர் கூறினார். ஆனால் எதிலும் வளர்ச்சி ஏற்படவில்லை, குறிப்பாக பாகூர் தொகுதியில் வளர்ச்சியே இல்லை” என்றார். உடனே பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு, “இந்த ஆட்சியில்தான் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “மக்களை சந்தித்து கஷ்டப்பட்டு ஓட்டு வாங்குபவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். உங்களைப்போல் மக்களைச் சந்திக்காமல் சுலபமாக பதவிக்கு வருபவர்களுக்கு வலி தெரியாது. பாஜகவில் நின்று, தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்ப்போம்” என்றார்.

அதற்கு பாஜக நியமன எம்எல்ஏ ராமலிங்கம், “16 மாநிலங்களில் நாங்கள் ஆட்சி செய்கிறோம். வளர்ச்சியை ஏற்படுத்தாமாலா இருக்கிறோம். ஒரே ஒரு மாநிலத்தில் தான் நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள்” என்றார்.

உடனே திமுக எம்எல்ஏ நாஜிம், “16 மாநிலங்களிலும் நீங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தீர்கள் என்று தெரியும்” என்று கூற, அதற்கு அசோக்பாபு, “தமிழகத்தில் திமுக தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற முடியுமா?” என்று கேட்டார். இதற்கிடையே பேரவைத் தலைவர், தற்போது அனுமதித்தவர் மட்டும் பேசலாம் என்று கூற, விவாதம் முடிவுக்கு வந்தது.

x