கள்ளக்குறிச்சி: கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
அப்போது களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (72) மற்றும் அவரது பேரன் சூர்யா (26) ஆகிய இருவரும் மற்றும் பாலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் ஆகியோர் மழைக்காரணமாக உளுந்தூர்பேட்டை - திருச்சி செல்லும் சாலையில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது இடி மின்னலுடன் மழை பெய்ததால் புளிய மரத்தின் மீது இடி விழுந்தது. அப்போது இடி தாக்கியதில் காசிலிங்கம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.