சேலம்: அதிமுக-வில் பிரிந்துள்ளவர்களை ஒன்றிணைப்பேன் என சசிகலா கூறுவதோடு சரி, அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை, என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி குழுவினர் பாஜக கூட்டணி வேண்டும் என்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், முனுசாமி உள்ளிட்ட குழுவினர் பாஜக கூட்டணி வேண்டாம் என்கின்றனர்.
அதிமுக-வினர் பாஜக கூட்டணி அமைப்பதில் பிளவு பட்டு நிற்கின்றனர். இவ்விரு குழுவின் நடுவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிக்கிக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் உள்ளார்.
அதிமுக-வில் பிரிந்துள்ளவர்களை ஒன்றிணைப்பேன் என சசிகலா கூறுவதோடு சரி, அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதிமுக-வினரை ஒருங்கிணைக்க நானும் முயற்சி எடுத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ஒரு மணி நேரம் போயஸ் தோட்டம் சென்று அமர்ந்து பேசினால் முடிவுகிட்டும். ஆனால், யாரும் முன் வரவில்லை.
கோடநாடு கொலை வழக்கு விசாரணை 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது, சிபிசிஐடி வசம் வழக்கு விசாரணை சென்றுள்ளது. இந்த வழக்கில் சசிகலா உள்பட 17 பேரிடம் போலீஸார் விசாரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை மட்டும் விசாரிக்காமல் விட்டது ஏன் என முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.