விருதுநகர்: போட்டியின்போது மயங்கி விழுந்ததால் தீவிர சிகிச்சைபெற்று வந்த காரியாபட்டியைச் சேர்ந்த கபடி வீரர் உயிரிழந்தார். அவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடையைச் சேர்ந்தவர் ஜெகன் (22). தந்தை உயிரிழந்ததால் தாயுடன் வசித்து வந்தார். பிளஸ்-2 படித்த ஜெகன், ராணுவத்தில் சேருவதற்காகப் பயிற்சிபெற்று வந்த இவர், கபடியில் சிறந்த வீரராக திகழ்ந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற நூற்றுக்கணக்கான கபடிப் போட்டிகளில் விளையாடி வெற்றிகளைக் குவித்தவர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பொய்கைக்கரைப்பட்டியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கபடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
கபடி வீரர் ஜெகன் இடையபட்டி 7 மவுண்டன் கபடி அணி சார்பில் விளையாடினார். களம் இறங்கி விளையாடியபோது எதிர் அணியினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது ஜெகன் மயங்கி விழுந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் ஜெகனை பரிசோதனை செய்தபோது அவருக்கு தலையின் பின்புறம், சுவாசநரம்பு, கொண்டை நரம்பு செயல் இழந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை ஜெகன் உயிரிழந்தார்.
நேற்று ஜெகன் உடல் அவரது சொந்த ஊரான காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடைக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.