மதுரை மேற்கு யாருடைய கோட்டை என பார்ப்போம்: செல்லூர் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி சவால்!


மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாங்குளத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை: எத்தனை மூர்த்தி வந்தாலும் மதுரை மேற்கில் திமுக வெற்றி பெறாது எனக்கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிற்கு பதில் அளிக்கும் விதமாக மதுரை மேற்கு தொகுதி யாருடைய கோட்டை என்பதை பொறுத்திருந்த பாருங்கள் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.20.72 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 115 திட்டப் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன்பின் மாங்குளம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரேஷன் கடையை தொடங்கி் வைத்தார். இதில், எம்எல்ஏ ஆ.வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, கோட்டாட்சியர் சங்கீதா, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி கிழக்கு தொகுதியில் 85 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், 39 ரேஷன் கடைகளும் ரூ.22 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் அமைச்சரிடம் , ‘மதுரை மேற்குத் தொகுதி அதிமுகவின் கோட்டை, ஒரு மூர்த்தி அல்ல.. மும்மூர்த்தி வந்தாலும் வெற்றிபெற முடியாது’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால் விடுத்துள்ளாரே.. எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மேற்குத் தொகுதி யாருடைய கோட்டை என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார்.

x