ஆவினை திட்டமிட்டு அழிக்க கார்ப்பரேட்டுகள் சதி: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு


சென்னை: ஆவினால் மட்டுமே தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல், இயற்கைக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை திட்டமிட்டு அழிக்க கார்ப்பரேட்டுகள் செய்கின்ற சதியாக இருக்குமோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பொருட்களின் ஒட்டுமொத்த பயன்பாட்டிற்கு மாற்றுவழி குறித்து முழுமையாக அலசி ஆராயாமல் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை நெகிழி உறைகளில் அடைத்து விற்பனை செய்வதால் மட்டுமே இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவது போல் பேசுவதும், அதுவும் தமிழ்நாட்டின் தினசரி பால் தேவையில் 84% வரை பங்களிப்பு கொண்ட தனியார் பால் நிறுவனங்களையும், பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களையும் பிரதிவாதிகளாக சேர்க்காமல் வெறும் 16% முதல் 18% வரை மட்டுமே பங்களிப்பு கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு பொதுநலன் என்கிற பெயரில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவதும், அதனை மட்டுமே கவனத்தில் கொண்டு பசுமைத் தீர்ப்பாய அமர்வின் உறுப்பினர்கள் விசாரணை நடத்தி உத்தரவிடுவதும் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனத்தை அழிவிற்கு கொண்டு சென்று விடும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கையாக சுட்டிக் காட்டுகிறது.

ஏனெனில் தமிழ்நாட்டில் தினசரி 1.5கோடி லிட்டருக்கு மேல் நெகிழி உறைகளில் அடைக்கப்பட்ட பால் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதில் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி, குஜராத்தை சேர்ந்த அமுல் உள்ளிட்ட கூட்டுறவு பால் நிறுவனங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி, சிறு, குறு, நடுத்தரமான பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் ஓன்று சேர்ந்து சுமார் 1.20கோடி லிட்டர் பாலினை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய, நம் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினோ வெறும் 30லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இந்த சூழலில் ஆவினால் மட்டுமே தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல், இயற்கைக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை திட்டமிட்டு அழிக்க கார்ப்பரேட்டுகள் செய்கின்ற சதியாக இருக்குமோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. காரணம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநலன் கருதி வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களின் பெயரையோ அல்லது பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களின் பெயரையோ குறிப்பிட்டதாகவோ, அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளதாகவோ தெரியவும் இல்லை, அது குறித்த செய்திகளும் தற்போது வரை வெளியாகவும் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மேலும் ஆவின் மட்டுமின்றி அனைத்து பால் நிறுவனங்களும் பயன்படுத்தும் நெகிழி உறைகளானது மறு சுழற்சி செய்யக்கூடியவை தான் என்பதால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட பால் நெகிழி உறைகளை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களே சேகரித்து அவற்றை மறு சுழற்சி செய்வதற்கான முயற்சிகள் குறித்தும், அதற்கான ஆக்கபூர்வமான வழிகள் குறித்தும் சிந்திப்பது தான் கால மாற்றத்திற்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர நெகிழி உறைகளை முற்றிலுமாக தடை செய்வது என்பது மக்களுக்கான பால் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கி ஒட்டுமொத்த பாலுற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் கடுமையான பாதிப்பை, பால் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விடும்.

ஒருவேளை பாலினை நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் தான் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதி உத்தரவை பிறப்பிக்குமானால் அது ஒட்டுமொத்த பால் உற்பத்தி, வணிகம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து பால் நிறுவனங்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது, அப்போது தான் அந்த உத்தரவானது எந்த ஒரு பால் நிறுவனத்திற்கும் தனிப்பட்ட முறையிலான சாதக, பாதகங்களை ஏற்படுத்தாமல் இருக்கும். அதே சமயம் கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் பாலினை அடைத்து தான் விற்பனை செய்ய வேண்டும் என்கிற உத்தரவு ஆவினுக்கு மட்டுமானதாக அமுல்படுத்தப்படுமானால் தற்போது உள்ள பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான கட்டமைப்புகள் அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகும், அதனால் அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழல் உருவாகி மக்களின் வரிப்பணம் வீணாகும்.

மேலும் பாலினை வழங்குவதற்கான கண்ணாடி அல்லது நெகிழி குடுவைக்கான செலவினங்கள் நுகர்வோராகிய பொதுமக்கள் தலையில் தான் வந்து விழும் என்பதால் தற்போதைய சூழலில் மறு சுழற்சி செய்யக்கூடிய 500மிலி அளவுள்ள ஒரு கண்ணாடி குடுவையின் விலை 16.00ரூபாயாகவும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய உணவு பொருள் தரச்சான்றுள்ள 500மிலி அளவுள்ள நெகிழி குடுவையின் விலை 8.00ரூபாயாகவும் இருப்பதால் இதன் விலை பாலின் விலையோடு கூடுதலாக சேர்வதோடு, குடுவையில் பாலினை அடைத்து சந்தைப்படுத்துவதற்கான ஆட்கள், வாகன வசதி தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு கூடுதலாக தேவைப்படும் என்பதால் பணியாளர்களுக்கான சம்பளம், வாகன வாடகை சேர்த்து லிட்டருக்கு 6.00ரூபாய்க்கு மேல் ஆகும் செலவினங்களோடு கண்ணாடி குடுவையை கையாளும் போது உடைவதால் ஏற்படும் இழப்பும் பாலின் விலையோடு கூடுதலாக சேரும் போது தற்போதைய விற்பனை விலையை விட பன்மடங்கு அதிகரித்து பொதுமக்களை மிகக் கடுமையாக பாதித்து ஏழை, எளிய மக்களுக்கு பால் என்பது எட்டாக்கனியாக மாறி விடும் என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.

அந்த வகையில் தற்போது ஆவினில் உள்ள நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 500மிலி 30.00ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதனை கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 500மிலி பால் 50.00ரூபாய்க்கு குறையாமல் தான் வழங்கிட முடியும். அது போல நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 500மிலி 22.00ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதனை கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் அடைத்து விற்பனை செய்வதாக இருந்தால் 500மிலி பால் 40.00ரூபாய்க்கு குறையாமல் தான் வழங்கிட முடியும் என்பதால் நெகிழி உறைகளுக்கு மாற்றாக கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் பாலினை விற்பனைக்கு கொண்டு வருவது என்பது 100க்கு 200% சாத்தியமில்லாத ஓன்றாகும். (தற்போது முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா 1.5லிட்டர் நிறைகொழுப்பு பாலினை நெகிழி குடுவையில் அடைத்து 120.00ரூபாய்க்கும்,1.5லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பாலினை 110.00ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது என்பதும், அது மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றால் உற்பத்திக்கேற்ற வகையில் அதனை பொது மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான சந்தைப்படுத்துதலில் நிகழ்ந்த மாற்றங்களும், நெகிழி பொருட்களின் பயன்பாடும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கையில் பாலினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பிருந்த கற்கால நடைமுறைக்கு பால் வணிகத்துறையை மாற்ற நினைப்பது என்பது ஒட்டுமொத்த பால் உற்பத்தியை பாதிப்படையச் செய்து பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை பின்னுக்குத் தள்ளும் சதியாக கூட இது இருக்கலாம், அதுமட்டுமின்றி நமது பாரம்பரியமிக்க நாட்டு மாடுகளை அழிக்க, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய கால்நடை ஆர்வலர்கள் என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பீட்டா போன்ற அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுவதால் இந்த வழக்கு தொடர்ந்த நபர்களின் பின்புலம் குறித்து தமிழ்நாடு அரசு தீர விசாரிக்க உத்தரவிட வேண்டும.

மேலும் ஏற்கனவே இருந்த தானியங்கி பால் விற்பனை நிலையங்கள், சில்லறையாக (Loose Milk) பால் விற்பனை செய்யும் ((FRP Tank) விற்பனை நிலையங்கள் பொதுமக்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்ட நிலையில், நெகிழிப் பொருட்கள் தடை குறித்த வழக்கு ஒன்றில்
கடந்த சில மாதங்களுக்கு முன் கண்ணாடி அல்லது நெகிழி குடுவையில் அடைத்து பாலினை விற்பனை செய்வது சாத்தியம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் கூறிய ஆவின் நிர்வாகம் தற்போது இரண்டு வார காலத்தில் நெகிழி உறைகளுக்குப் பதிலாக மாற்றுவழி செயல்படுத்த இருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எதனடிப்படையில் உத்தரவாதம் கொடுத்தது..? என்பதும், பால் பண்ணைகளில் உற்பத்தி பிரிவில் செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய மாற்றங்கள், அதனால் அரசுக்கு ஏற்படும் கடுமையான நிதிச்சுமை, ஆவினுக்கு ஏற்படும் மிகப்பெரிய நிதியிழப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு வாதங்களை ஆவின் நிர்வாகம் முன் வைத்ததா..? இல்லை தற்போதைக்கு பிரச்சினையை கொஞ்சம் தள்ளி வைப்போம் என கடமைக்காக அவ்வாறு உத்தரவாதம் கொடுத்ததா..? என தெரியவில்லை.

எனவே ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அரசின் அனுமதி பெற்று கொடுக்கப்பட்டதா..? அதனை செயல்படுத்துவதாக இருந்தால் அது எவ்வாறு சாத்தியம்..? என்பது குறித்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் மேலை நாடுகளில் உள்ளது போல் பயன்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களின் நெகிழி உறைகளை பொதுமக்களிடமிருந்து பெற்று மறு சுழற்சி செய்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் அதற்கான கட்டமைப்புகளை அரசு சார்பில் அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

x