அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது


விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக நிர்வாகி 3 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது அதிகனமழை பெய்ததில் விழுப்புரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விழுப்புரம் அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் தங்களுக்கு அத்தியாவசிய தேவைகளைகூட நிறைவேற்றித் தரவில்லை எனக் கூறி 500 க்கும் மேற்பட்டோர் இருவேல் பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அப்போதைய ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர்.

அப்போது அங்கிருந்த இருவர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் சட்டைமீது தெறித்தது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தலைமறைவான இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 21ம் தேதி ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயராணியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

x