புதுடெல்லி: தர்மேந்திர பிரதான் பேசியதற்கு இப்படி கொந்தளிக்கிறார்கள். பெரியார் இத்தனைமுறை தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லியுள்ளாரே. தமிழ் எனது தாய்மொழி, பெரியார் இப்படி பேசியதை கேட்கும்போது எனக்கு கோபம் வருகிறது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு நாடாளுமன்றத்தில் தொடங்கிய நிலையில், திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் கல்விக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரி பேசினர்.
திமுக எம்பிக்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,"தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள்" என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான்," என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என பேசி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,"தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள்.
ஆனால், திராவிட கட்சிகளின் அடையாளமாக இருக்கும் பெரியார் தனது விடுதலை நாளேட்டில் 1943ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, ‘தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது. தமிழ் படித்ததில் பிச்சை எடுப்பதை தவிர வேறு உயிர் வாழ்வதற்கு ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்க்கைக்கு பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் பாடியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்.
அதேபோல பெரியார், ‘இந்த தமிழ்மொழியானது காட்டுமிராண்டி மொழி என சொல்கிறேன் என்று கோபித்து கொள்ளும் யோக்கியர்கள் ஒருவரும் சிந்தித்து பேசுவதில்லை. வாய் இருக்கிறது என்று ஏதாவது பேசி வயிறை வளர்ப்போம் என்பதை தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமல் பேசுகின்றனர். இப்படிபட்ட இவர்கள் நோக்கப்படி சிந்தித்தாலும், தமிழ்மொழி 3000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என தமிழன் பெருமைக்கொரு சாதனமாக பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதையேதான் காரணமாக சொல்கிறேன். அன்றிருந்த மக்களின் நிலை என்ன அவர் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும். எவன் தான் ஆகட்டும். இவர்களை பற்றி தெரிந்துகொள்ளும் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழை பற்றி பேசும் தகுதி உடையவனா? உனக்கு வாய் இருக்கிறதா?” என்றும் பெரியார் பேசியிருக்கிறார்.
தமிழ் எனது தாய்மொழி, பெரியார் இப்படி பேசியதை கேட்கும்போது எனக்கு கோபம் வருகிறது. தர்மேந்திர பிரதான் பேசியதற்கு இப்படி கொந்தளிக்கிறார்கள். பெரியார் இத்தனைமுறை தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லியுள்ளாரே” எனத் தெரிவித்தார்
இதன் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.