கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெ. பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவரிடம் விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற வீரபெருமாள் என்பவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர் நேற்று வந்தார். அவரிடம் நேற்று மதியம் வரை ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது, பாதுகாப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்த ஒருவர், கனகராஜுக்கு செல்போன் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். பின்னர், அந்த ஆய்வாளரின் செல்போனை பாதுகாப்புப் பிரிவு போலீஸார் வாங்கியுள்ளனர். இந்த செல்போன் விவகாரம் குறித்தும், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான தகவல்கள் குறித்தும் வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

விசாரணைக்குப் பின்னர், வெளியே வந்த வீரபெருமாள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் நான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றவில்லை. அவரிடம் நான் பணியாற்றியதாக கூறப்படுவது தவறான தகவல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டேன்" என்றார்.

x