மேட்டூர்: மேச்சேரி உழவர் சந்தையில் இன்று நடைபெற்ற 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இங்கு, கடந்த ஓராண்டில் ரூ 3.83 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
சேலம் மாவட்டம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மேச்சேரியில் புதியதாக உழவர் சந்தை கட்டப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் (11-ம் தேதி) திறக்கப்பட்டது. இதில் 16 கடைகள் உள்ளன. மேச்சேரி, பொட்டனேரி, தெத்திகிரிபட்டி, வெள்ளார், குட்டப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து விவாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தக்காளி, அவரைகாய், வெங்காயம், வெண்டைகாய், கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் வெளி மார்க்கெட்டுகளை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது. இதனால் காய்கறிகளை வாங்கிட, மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, உழவர் சந்தை திறக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டை நிறைவடைந்தது. தொடர்ந்து, 2-ம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. எனவே, உழவர் சந்தை அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விவசாயிகள், நுகர்வோர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பிரேமா, உழவர் சந்தை அலுவலர் சரவணன், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், மேச்சேரி உழவர் சந்தைக்கு விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து காய்கறி வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிமார்க்கெட்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு 20 சதவீதமும், நுகர்வோர்களுக்கு 15 சதவீதமும் லாபம் கிடைக்கும். உழவர் சந்தை மூலம் 85 விவசாயிகளுக்கு உழவர் உட்டை வழங்கப்பட்டுள்ளது. 16 கடைகள் மட்டுமே இருப்பதால் விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் கடைகள் ஒதுக்கப்படுகிறது.
உழவர் சந்தைக்கு ஆரம்ப காலத்தில் 100 முதல் 150 பேர் வந்த நிலையில், நுகர்வோர் வருகை அதிகரித்துள்ளது. தற்போது, நாளொன்றுக்கு சராசரியாக 500 நுகர்வோர்கள் வருகின்றனர். கடந்த ஓராண்டில் ரூ 3 கோடியை 83 லட்சத்து 25 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனையாகின. கடந்தாண்டை காட்டிலும், வரும் ஆண்டில் விவசாயிகள், நுகர்வோர்கள் வருகையும், காய்கறிகள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.