திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தில் ஊழல் புரிந்த அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 பொது நலமனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.முல்லை தலைமையிலான சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனத்தை பெருக்கவும், தண்ணீர் பயன்பாடு அளவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொட்டு நீர்ப்பாசனம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் திட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் ஊழல் புரிந்த தோட்டக்கலை துறை அலுவலர்கள், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. மேலும், தேங்காய் விலையும் நிலையாக இல்லை. எனவே, தென்னை மரத்தில் இருந்து ‘கள்’ இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தென்னை விவசாயிள் தென்னை மரத்தில் இருந்து ‘கள்’ இறக்குவோம்’’ என தெரிவித்துள்ளார்.
நாட்றம்பள்ளி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மோலண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை. தற்போது, கோடை காலம் வந்துவிட்டதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆகவே, குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,‘‘நாட்றம்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அதாவது வாணியம்பாடி-கிருஷ்ணகிரி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், எங்கள் பகுதியில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எங்கள் கால்நடைகளை அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது ஒவ்வொரு முறையும் வாகன செலவாக ரூ.1,000 வழங்க வேண்டியிருப்பதால் எங்கள் பகுதியில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
நெல்லிவாசல்நாடு ஊராட்சியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அளித்த மனுவில், ‘‘ நெல்லிவாசல் நாடு முதல் நெல்லிப்பட்டு வரை சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் கடும் சிரமத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைத்துத்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
நாட்றம்பள்ளி அடுத்த ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,‘‘ எங்கள் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. எங்கள் பகுதியில் தெரு மின்விளக்கு இல்லாததால் மதுப்பிரியர்கள் தெருவில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இரவில் வெளிச்சம் இல்லாததால், வீட்டில் உள்ள ஆடு, கோழி, இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. இரவு 7 மணிக்கு மேல பெண்களால் வெளியே நடமாட முடியவில்லை. எனவே, டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். ஒவ்வொரு தெருவில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்த துளசிமணி என்பவர் அளித்த மனுவில், ‘எனது கணவர் ஆனந்தன் கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில், 7 பேர் மீது எனக்கு சந்தேகம் உள்ளதால் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி எனது கணவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.