ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சுற்றுவட்டார வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனைகளை நாடாமல், பாரம்பரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று குழந்தை பெறுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்து வருகின்றனர். இதனால், தாய், சேய் ஆகிய இருவருக்கும் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வந்தது.
இதனைத் தவிர்த்து கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், பழங்குடியின மக்களை கண்காணித்து, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வகையில், பர்கூரை அடுத்த சோழகனை பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் கர்ப்பமாய் இருப்பதை அறிந்த பர்கூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அவரது உடல்நலத்தை கண்காணித்து வந்தனர். அவரது பிரசவ தேதி நெருங்கிய நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேருவதற்கு விருப்பமில்லாத ஜோதி, தேவர்மலையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதையடுத்து காவல்துறையின் உதவியுடன், தேவர்மலைக்குச் சென்ற வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஜோதிக்கு அறிவுரை கூறினர்.
இதனைத் தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க, அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன் தினம் இரவு ஜோதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, ’கர்ப்பிணிப் பெண்களை அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்க்க வேண்டும் என பழங்குடி மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் சிசு மரணத்தை தடுக்கவும், தாய் சேய் நலமுடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.