சென்னை: லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய். இது சிம்பொனி இல்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்
இசைஞானி இளையராஜா லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், சிம்பொனி வெளியிட இளையராஜா தன்னை ஊக்குவித்து வந்ததாகவும், அவரது ஆசியுடன் தானும் சிம்பொனி வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி உலக இசை தினத்தில் இந்த சிம்பொனி தொகுப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் லிடியன் நாதஸ்வரம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள இளையராஜா, ‘லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே, இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள் அதன் பிறகு கம்போஸ் பண்ணு என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்திற்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக் கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்” என்று கூறியுள்ளார்
மேலும், “இத்தனை வருடங்களாக இசைத்துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை. சொந்தக் கால் என்றால் செருப்பு கூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான்” என்றும் தெரிவித்துள்ளார்