தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல்: தினகரன் ‘ஷாக்’ தகவல்!


சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல் – உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க முடியாத திமுக அரசு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் முன்னணி வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது, அந்தந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பேசுவது வெட்கக் கேடானது. முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

எனவே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழில் முடக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோடு, பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறு குறு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்

x