தமிழகத்தில் அரசு பணியில் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து


தமிழகத்தில் அரசுப் பணிகளி்ல் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேனியை சேர்ந்த ஜெய்குமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் தேனி மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாததால் நான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை தனி நீதிபதி விசாரித்து, ஜெய்குமாரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், மனுதாரரின் தந்தை கப்பற்படையில் பணிபுரிந்தவர். இடமாறுதல் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை. தற்போது தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். எனவே, பணியில் சேர்க்க வேண்டும் என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் அரசுப் பணியில் சேர, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால் என்ன செய்வது? அவரால் எப்படி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியும்?

தமிழகத்தில் மட்டும் அல்ல, எந்த மாநிலத்திலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியாவிட்டால் குறிப்பிட்ட கால அளவுக்குள் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழித் தேர்வில் வெற்றிபெற வேண்டும். ஒரு மாநிலத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்? என தெரிவித்து இறுதி விசாரணையை தள்ளிவைத்தனர்

x