புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரல்: அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து


மக்களவையில் தமிழக முதல்வர் குறித்தும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மக்த்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அவமானகரமான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு உண்மையிலேயே புரிகிறதா அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஸ்க்ரிப்டை வாசிக்கிறாரா? கல்வியில் மத்திய பாஜக அரசின் அரசியல் தலையீடு மன்னிக்கப்படாது. மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த துரோகத்தை நினைவில் கொள்வார்கள்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல. அது ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரல். தமிழகம் அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் கல்விக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்

x