நீலகிரி பழங்குடியினர் வாழ்க்கை முறை எப்படி? - உதகை வந்த பெங்களூரு மாணவர்கள் ஆய்வு!


உதகை: நீலகிரி பழங்குடியினர் வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்ள பெங்களூரு மாணவர்கள் உதகை வந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் மாவட்ட மைய நூலகம் கடந்த 72 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். சுமார் 1¾ லட்சம் புத்தகங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் பிற மொழி என தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், வெளியீடு என சுமார் 240 வெளியீடுகளும், போட்டித் தேர்வுகளுக்கு தனியான புத்தகங்களும் உள்ளன. இதேபோல் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுவர்களுக்கு தனிப்பிரிவு உள்ளது.

இந்த நூலகத்தில் சிறப்பு அம்சமாக பழங்குடியினர் பண்பாடு சார்ந்த தனி நூலகம் உள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள், தமிழ்நாடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வரலாறு சார்ந்த ஆராய்ச்சி புத்தகங்கள் உள்ளன. பழங்குடியினர்களின் வாழ்க்கை முறை இந்தநிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி மைய மாணவ, மாணவிகள் சுமார் 30 பேர் இந்த நூலகத்திற்கு வருகை புரிந்து பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வரலாற்று நூல்களை படித்து தங்கள் படிப்புக்கு குறிப்பெடுத்து கொண்டனர்.

அவர்களுக்கு மாவட்ட மைய நூலக ரவி, நூல்கள் குறித்தும் பழங்குடியினர்களின் வரலாறுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது பழங்குடியினர் குறித்து மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து பெங்களூரு மாணவர்கள் கூறியதாவது: ''பழங்குடியின வாழ்க்கை முறைகள் குறித்து ஆன்லைனை காட்டிலும் புத்தகங்களில் அதிக கருத்துக்கள் உள்ளது. இங்குள்ள புத்தகங்கள் மற்றும் தொகுப்புகள் மூலம் பழங்குடியினர் இடத்துக்கு நேரில் சென்றது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பழங்குடியினரின் மாறாத கலாச்சாரம் வியப்பளிக்கிறது, பழங்குடியினர் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

x