புழல் மத்திய சிறையில் கஞ்சா, பீடி, சிகரெட் பறிமுதல்: வெளியிலிருந்து வீசியது யார்?


புழல் மத்திய சிறையிலிருந்து ஏராளமான கஞ்சா, பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் மத்திய சிறையில் உள்ள தண்டனை, விசாரணை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரம் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். அவ்வப்போது சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட மொபைல் போன்கள், கஞ்சா உள்ளிட்டவற்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புழல் மத்திய சிறையின் விசாரணைப் பிரிவில் நேற்று முன்தினம் சிறைக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுற்றுச்சுவர் அருகே கிடந்த பந்து வடிவிலான ஒரு பொட்டலத்தை புதுக்கோட்டையை சேர்ந்த விசாரணை கைதியான மாதவன் (24) எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றதைப் பார்த்த சிறைக் காவலர், அவரிடமிருந்த பொட்டலத்தை கைப்பற்றி பார்த்தபோது 90 கிராம் கஞ்சா, 2 பீடி கட்டுகள், 10 சிகரெட்டுகள் இருந்தன.

இது குறித்து சிறைக் காவலர்கள் மாதவனிடம் நடத்திய விசாரணையில், சென்னை பெரியமேடு காவல் நிலைய எல்லை யில் நடந்த அடிதடி வழக்கில் கைதான சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த உதயா (24) அறிவுறுத்தியதின் பேரில், சுற்றுச் சுவர் அருகே கிடந்த பொட்டலத்தை மாதவன் எடுத்துக் கொண்டு, அறைக்கு சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக புழல் மத்திய சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு வெளியிலிருந்து, கஞ்சா உள்ளிட்டவை அடங்கிய பொட்டலத்தை வீசியது யார் எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x