முத்துப்பேட்டை அருகே சுற்றித்திரியும் காட்டெருமை; பொதுமக்கள் அச்சம்


முத்துப்பேட்டை அருகே காட்டெருமை ஒன்று சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கீழக்காடு பகுதியில் பொதுமக்கள் வசிப்பிடத்தின் வழியாக நேற்று ஒரு காட்டெருமை சென்றது. அது யாரையும் தொந்தரவு செய்யாமல் நடந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, வனத் துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, “அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி வழியாக இந்த காட்டெருமை வந்திருக்கலாம். வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வனப் பகுதிக்கு அது நடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. காட்டெருமையை பார்க்கும் பொதுமக்கள் அதை தொந்தரவு செய்ய வேண்டாம். யாராவது தன்னை தொந்தரவு செய்வதாக அது உணர்ந்தால், வேகமாக ஓட்டம் எடுக்கும்.

எதிரில் உள்ளவர்களையும் தாக்கும். அதை தொந்தரவு செய்யாத வரை மற்ற யாரையும் காட்டெருமை எதுவும் செய்யாது. ஆனாலும், இதை தேடும் பணியில் வனத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவாக பிடித்துவிடுவோம்” என்றனர்.

x