புதுடெல்லி: தமிழக முதல்வர் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்று கையெழுத்திட முன்வந்தார். ஆனால், திடீரென ஒரு சூப்பர் முதல்வர் வந்து அதைத் தடுத்துவிட்டார். அந்த சூப்பர் முதல்வர் யார்? என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இதில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பிக்கள் முழக்கம் இட்டனர். இதனை தொடர்ந்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, ‘புதிய தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய 2152 கோடி ரூபாய் நிதிப்பகிர்வை தராமல் இருப்பது பலி வாங்கும் நடவடிக்கை. இது மாணவர்களை பாதிக்கிறது. மாநிலங்கள் இது போன்ற கொள்கையையை நிராகரித்தால் நிதி மறுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மார்ச் மாதம் முடிய இன்னும் 20 நாள்கள் இருக்கின்றன. மத்திய அரசு இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தமிழக அரசுடன் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. அதற்காக மாநில கல்வி அமைச்சரும் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களும் என்னை வந்து சந்தித்தனர். ஆனால் அவர்கள் கடைசி சில நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.
பாஜக ஆளாத மாநிலங்களிலும், உதாரணமாக கர்நாடகாவில் கூட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிபு நடப்பதாகக் குற்றம்சாட்டுவது தவறானது.
அவர்களுக்கு தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்களின் ஒரே வேலை மொழி பிரச்சினையை உருவாக்குவதுதான். அவர்கள் அரசியல் செய்கிறார்கள். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாகக் கூறிவிட்டு, பிறகு யூ-டர்ன் அடித்தது ஏன்?. கடந்த ஆண்டு மார்ச் 15ல் பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்ததில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. தமிழக முதல்வர் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்று கையெழுத்திட முன்வந்தார். ஆனால், திடீரென ஒரு சூப்பர் முதல்வர் வந்து அதைத் தடுத்துவிட்டார். தமிழக அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது. சூப்பர் முதல்வர் சொன்னதால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட மறுத்திருக்கிறது, அந்த சூப்பர் முதல்வர் யார்?" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.